"தீப்பந்தம் ஏந்தும் கை"யை மட்டும் சேர்த்தால் தேமுதிமுக கொடி போல மாறிவிடும் அபாயம் கொண்டதுதான், ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்களின் (Australian aborigines/indigenous) கொடி. கறுப்பு பூர்வகுடிமக்களையும், சிவப்பு நிலத்தையும், மஞ்சள் சூரியனையும் குறிப்பன. டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் குடிமக்களின் கோடி பச்சை (நிலம்), நீலம் (நீர்), கருப்பு (மக்கள்) , வெள்ளை (தலைப்பாகை மற்றும் ஐமுனை நட்சத்திரம்) நிறங்களைக் கொண்டிருக்கும். ஆஸ்ட்ரேலியாவின் கேப் யார்க் நிலப்பகுதிக்கும், நியூ கினியா தீவுக்கும் இடைப்படட்ட கடற்பகுதியில் இருக்கும் 274 தீவுகள் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகள் என்றும், அதன் குடிமக்கள் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவினர் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.
இந்த வாரம் (27 May - 3 June) ரீகன்ஸிலியேஷன் (National Reconciliation Week) வாரம். அதாவது, ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்கள் மற்றும் டாரஸ் ஸ்ட்ரெய்ட் தீவுகளின் குடிமக்களுக்கும் (Torres Strait Islanders), இதர ஆஸ்ட்ரேலிய குடிமக்களுக்கும் (non-indigenous) இடையேயான உறவுகளை பலப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயல்களை ஊக்குவிக்கும் வாரம். இந்த ஆண்டின் கருப்பொருள் (theme) உண்மையைய் உரக்கச் சொல்லி, ஒற்றுமையாக நடப்போம் துணிவோடு "Grounded in Truth, Walk Together in Courage" 1770-ஆம் வருடம், கேப்டன் குக் ஆஸ்ட்ரேலியாவை "கண்டபோது" அங்கு பல்லாயிரம் ஆண்டுகளாய் வசித்து வந்த பழங்குடியினரைக் கண்டு கொள்ளாமல், "யாரும் வசிக்காத நிலம்" (Terra Nullius) என்று பிரிட்டிஷ் காலனியாக அறிவிக்க பரிந்துரை செய்தார். பின்பு (1788) வந்த பிரிட்டிஷ் மக்கள் இந்த பழங்குடியினரை அப்புறப்படுத்த நடத்திய நிகழ்வுகள் பெரும் வரலாற்று சோகங்கள். அவர்களை படாத பாடுபடுத்தி, துப்பாக்கியால் சுட்டு, மனிதர்கள் குடிக்கும் நீர்த்தேக்கங்களில் விஷம் வைத்து, மலைகளில் மேலிருந்து தள்ளிக் கொன்றனர். எஞ்சிய பழங்குடியினரின் குழந்தைகளுக்கு நவ நாகரீக வாழ்வு முறையைக் கற்றுத் தருகிறோம் என்று தாய் தந்தை, உறவினரிடமிருந்து பிரித்து (திருடி), அரசால் அனுமதிக்கப்பட்ட கிறிஸ்டியன் மிஷனரிக்கள் ‘திருடப்பட்ட தலைமுறை’களை (Stolen Generations) உருவாக்கினர்; இச்செயல்கள் ஏற்படுத்திய சமூக, உளவியல் பாதிப்புகளை ஒப்புக்கொண்டு, 2008-ஆம் ஆண்டு அரசு மன்னிப்புக் கோரியது.
நடந்த வரலாற்று நிகழ்வுகளை மறக்காமல்/மறைக்காமல், உண்மையைப் பகிர்ந்து, மீண்டும் பழைய தவறுகள் நடக்காமல் ஆஸ்ட்ரேலிய பூர்வகுடிமக்களை சமமாக மதித்து, அவர்களை உள்ளடக்கி இந்த சமுகம் நடக்க வழி வகுக்க வேண்டும். மண்ணின் மைந்தர்களாகிய அவர்களுக்கு, நாம் செய்யக்கூடிய சிறிய பிரதிபலன் இதுவே. --திரு #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியவாழ்க்கை https://www.reconciliation.org.au/what-is-reconciliation/#what-is-reconciliation https://australianmuseum.net.au/learn/cultures/atsi-collection/cultural-objects/indigenous-australia-flags/ https://www.creativespirits.info/aboriginalculture/politics/stolen-generations/sorry-apology-to-stolen-generations மற்ற பதிவுகள்: கறுப்பும் வெளுப்பும் - https://www.facebook.com/photo.php?fbid=10156953064681708 உழைப்பாளர் தின விடுமுறை - https://www.facebook.com/pthirumurugan/posts/10156927136741708
Comments