தங்கக்கரை, பொற்கரை, சூரியக்கரை, விக்றோரியா எல்லாம் ஆஸ்ட்ரேலியாவில்தான் இருக்கின்றன என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? Goldcoast தங்கக்கரை, பொற்கரை என்றும், Sunshine coast சூரியக்கரை என்றும், Victoria விக்றோரியா என்றும் சில தமிழ்க்குழுக்கள், தமிழார்வலர்கள் தமிழ்ப்படுத்துகிறார்கள். Australia (ஆஸ்ட்ரேலியா)-வை ஆஸ்திரேலியா, அவுஸ்திரேலியா, ஆசுத்திரேலியா என வேற, வேற மாதிரி எழுதுவதும் சரியில்லை.
பிரிட்டிஷார் போல் உதகமண்டலம் என்பதை ஓட்டகமண்ட், ஊட்டி என்று சீரழிக்காமல், ஆஸ்ட்ரேலியர்கள் பெரும்பாலான சிறுநகரங்களுக்கு ஆஸ்ட்ரேலிய பழங்குடியின பெயர்களையே வைத்துள்ளனர் (சில பெரிய நகரங்கள் விதிவிலக்கு). ஒரு அலுவலகத்தில் புதிதாய்ச் சேர்ந்தால், உங்கள் பெயரின் சரியான உச்சரிப்பைச் சொல்லச்சொல்லி, திரும்பத் திரும்ப உச்சரித்து சரியாக சொல்லி, மற்ற பணியாளர்களையும் சரியாக சொல்ல வைப்பார்கள். பெரும்பாலான ஆங்கிலேயர் போல் இந்தியப் பேரை சுருக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்த மாட்டார்கள்.
ஆஸ்ட்ரேலியர்கள் ஊர்களின் பேர்களை ஒரு வகையில் எழுதிவிட்டு, மற்றொரு வகையில் உச்சரிப்பார்கள். முன்னாடி ஓரு பதிவில் சொன்ன Gympie (கிம்ப்பி) ஒரு உதாரணம். Cockburn என்பதை "கோபர்ன்" என்றும், Hervey Bay-வை "ஹார்வி பே" என்றும், Thornbury என்பதை “தான்பிறீ” என்றும் சொல்ல வேண்டும். நம்ம இஷ்டத்துக்கு சொன்னால் என்ன? சொல்லலாம்! எங்கே, யாரிடம் என்பது தான் பிரச்சினை. கூட வேலை பார்க்கும் பெண்ணிடம் Ballarat என்ற ஊரின் பெயரை விதவிதமாய் "பல்லாரெட், பல்லரட், பள்ளரேட் பாலரத், பல்லாரட்" என்றெல்லாம் உச்சரித்து தோற்றுப்போய் எழுதிக் காட்டியதும்.. "ஓ... யூ மீன் பேலரட்?" என்றார்.
இத்தகைய சூழல்களில், சிரித்துக்கொண்டு சரியான உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுத்துவிடுவார்கள். இதுவே நீண்ட காலமாய் இங்கு வசித்துவிட்டு, குழுவிலோ, மேடைப்பேச்சோ அல்லது தேர்தல் பிரச்சாரத்திலோ, உங்களுக்கு 'உள்ளூர் மொழி' தெரியவில்லை எனில் இவர்களின் நட்பையும், நம்பிக்கையையும் பெறுவது கடினம்.
பெயர்ச்சொற்களைத் தமிழ்ப்படுத்தி 'படுத்தாமல்' அந்தந்த ஊரின் சரியான உச்சரிப்பைத் தமிழ் எழுத்துக்களால் எழுதலாம். சரி, தமிழ்ப்படுத்தியே தீருவேன் என்றால், அடைப்புக்குறிகளுக்குள் எந்த ஊர் என்பதை ஆங்கிலத்தில் குறிப்பிடுவது சிறப்பு.
நடிகன் படத்தில் 'வெண்ணிற ஆடை' மூர்த்தி இஸ்லாண்ட் (island) எஸ்டேட்டை தேடி அலைவதைப் போல் இல்லாமல் இருந்தால் சரி!
எனக்குத் தெரிந்தவரை சரியான உச்சரிப்புடன் கீழே பட்டியலிட்டுள்ளேன். ஐயம் இருந்தால் உள்ளூர் வாசிகள் சொல்வதே இறுதித் தீர்ப்பு.
ஆஸ்ட்ரேலியா (Australia)
க்வின்ஸ்லேண்ட் (Queensland),
விக்டோரியா (Victoria)
வெஸ்டர்ன் ஆஸ்ட்ரேலியா (Western Australia)
சௌத் ஆஸ்ட்ரேலியா (South Australia)
நார்தன் டெரிடரி (Northern Territory)
ஆஸ்ட்ரேலியன் கேப்பிடல் டெரிடரி (Australian Capital Territory)
டாஸ்மேனியா (Tasmania)
ஸிட்னி (Sydney)
மெல்பன் (Melbourne)
பிரிஸ்பன் (Brisbane)
டார்வின் (Darwin)
கான்பரா (Canberra)
அடிலைட் (Adelaide)
பர்த் (Perth)
கெய்ன்ஸ் (Cairns)
ஸன்ஷைன் கோஸ்ட் (Sunshine Coast)
கோல்ட் கோஸ்ட் (Gold coast)
இதைப்பத்தி உங்கள் கருத்தென்ன?
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
Comments