சென்ற மாதம் க்வீன்ஸ்லாண்ட் மாநில முதல்வர் (Premier) அனஸ்டேஷீய பேலஷே (Annastacia Palaszczuk MP), பிரிஸ்பனில் இருக்கும் இந்திய சமூக அமைப்புகளை விருந்துக்கு (Indian Community Reception) அழைத்திருந்தார். அனைவரையும் அழைத்து, ஒருங்கிணைத்தது குயின்ஸ்லாந்தின் இந்திய சமூகங்களின் கூட்டமைப்புக்கு (Federation of Indian Communities of Queensland (FICQ) |...) நன்றி.
ஏறத்தாழ 500 பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தாய்த் தமிழ்ப் பள்ளியின் (Thaai Tamil School Inc ) சார்பாக முதல்வரையும், பல்லினக் கலாச்சார அமைச்சர் (Multicultural Minister) ஸ்டிர்லிங் ஹின்ச்கிலிஃப் (Stirling Hinchliffe MP)-யும் சந்தித்தோம். முதல்வருக்கு காலில் அடிபட்டிருந்ததால் அவரால் ரொம்ப நேரம் இருக்க முடியாது என்று அமைச்சர் சொன்னார். மயில்-கழுத்து வண்ண பட்டுப்புடவையை அழகாய் உடுத்தி வந்திருந்தார் முதல்வர்.
க்வீன்ஸ்லாண்ட் அரசு பல்லினக் கலாச்சாரத்தை (Multiculturalism) ஒரு முக்கிய பலமாக பார்ப்பதை வலியுறுத்தினார். க்வீன்ஸ்லாண்டில் ஒவ்வொரு இனக்குழுவும் தம் சொந்தக் கலாச்சார அடையாளங்களையும் கொண்டிருக்க, அவரவர் மொழிகளை, வளர்க்கத் தடை ஏதுமில்லை என்றார். அனைவரும் சமுதாய நல்லிணக்கத்தோடு, க்வீன்ஸ்லாண்ட்-ஐ சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு இதுவரை தந்துவரும், இனி தரப்போகும் உழைப்புக்கு நன்றிகள் சொன்னார்.
முதல்வரோட படம் எடுத்துக்கொள்ள ஒரு குழுவுக்கு அரை நிமிடம், குறைந்தது நான்கு பேர் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாய்ச்சொல்லி இருந்தார்கள். நாங்களோ மூன்று பேர். நாங்கள் கொண்டு சென்ற நினைவுப்பரிசு முதல்வரை கவர்ந்ததாலோ, என்னவோ வெறுங்கையோடு வந்தவர்களை போல அவசர, அவசரமாய் தள்ளாமல், உதவியாளர்கள் கொஞ்ச நேரம் கொடுத்து படம் எடுக்க உதவினர்.
முதல்வரின் பெயரை தமிழ் எழுத்துக்களில் எழுதிய நினைவுப் பரிசை வழங்கினோம். மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்துவிட்டு 'இதுவா என் பெயர்? தமிழ்-ல எழுதினா கூட ரொம்ப நீளமா இருக்கே' என்று சுய எள்ளல் செய்து சிரித்து, எங்களையும் சிரிக்க வைத்தார்.
அப்போதுதான் கற்றுக்கொண்ட "நன்றி" என்னும் வார்த்தையை சொல்லி வழி அனுப்பினார் அமைச்சர்! பல்லினக் கலாச்சார அமைச்சர்-னா சும்மாவா? அவரை மட்டும் மறுபடி தனியாக பார்த்து தமிழ்ப்பள்ளிக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். வருவதாக உறுதியளித்துள்ளார், பார்க்கலாம்!
பின் வருவது எனக்கு மட்டுமான குறிப்பு: இப்படி வருடத்திற்கு ஒரு முறை, ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளைப் பார்த்து போட்டோ எடுத்து பேஸ்புக், வாட்ஸப்பில் பீற்றிக்கொள்வதோடு நிறுத்தாமல், உள்ளூர் அரசியலைத் தெரிந்துகொண்டு, ஈடுபாட்டோடு பங்காற்ற வேண்டும்!
-திரு
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
Comments