TL;DR (சுருக்கம்) - தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்டால், முன்பின் தெரியாதவராய் இருந்தாலும் ஓடோடி வந்து உதவி செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். தேவைப்பட்டால் தயக்கமின்றி உதவி கேளுங்கள்; உதவி கேட்பவர்களுக்கு நீங்களும் உதவி வழங்குங்கள். இதுதான் Mateship (நட்புணர்வு) எனப்படும் ஆஸ்திரேலிய பண்பாடு.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆஸ்திரேலிய தினம். வெயில் தாழும் மாலை நேரத்தில் கிளம்பி, குழந்தைகள், குடும்பமாக 8 பேர், இரண்டு வாகனங்களில் (ஒரு யூட் - Ute மற்றும் ஒரு ஆல் வீல் டிரைவ் - All Wheel Drive), அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று வரலாமென்று கிளம்பினோம். சாலையிலிருந்து இறங்கி கடற்கரை மணலில், ஒரு சுற்று போய் விட்டு வீட்டுக்குப் போவதென்று திட்டம்.
சில நூறு மீட்டர் கடற்கரை மணலுக்குள் ஓடியபின், எங்களுக்கு முன்னால் சென்ற Ute வண்டி முன்செல்லாமல், நிலையாய் நின்று, அதன் சக்கரங்கள் மட்டும் வேகமாய்ச் சுழல ஆரம்பித்தன. மென்மையான கடற்கரை மணலில் சரியான பிடிப்பு இல்லாமல், சக்கரங்கள் வேகமாய் பள்ளம் தோண்ட, சில நொடிகளில் அந்த Ute வண்டி மணலில் மாட்டிக்கொண்டது.
பின் சென்ற எங்கள் காரின் சக்கரங்களும், மணலில் சுழன்று, குழி பறிக்க ஆரம்பித்தன. சுதாரித்துக்கொண்ட நான், அதை ஓட்டி வந்த என் நண்பரிடம், காரை நிறுத்திவிட்டு வாகனத்திலிருந்து எல்லோரையும் வெளியேறச் சொல்லி விட்டு, வண்டி ட்யூப்களின் காற்றை வெளியேற்றி, டயர் அழுத்தத்தை பாதியாகக் குறைத்து, காரை உயிர்ப்பித்தோம். வண்டி மெதுவாக பள்ளத்தில் இருந்து மேலேறியது.
'கம்ப்யூட்டரில் குப்பை கொட்டும் உனக்கு இவ்வளவு அறிவா' என்று அதிர்ச்சியடைய வேண்டாம்.கொஞ்ச நாள் முன்னாடிதான் நான் வேலை பார்த்த கம்பெனி என்னை ஒரு ஸ்பெஷல் பயிற்சிக்கு (4WD Training) அனுப்பி இதெயெல்லாம் கற்கச் சொல்லிருந்தார்கள். அந்த கதை மற்றோர் நாள் எழுதுகிறேன்!. ஆனாலும், முதல் வண்டி ரொம்ப ஆழமாக, பள்ளம் பறித்துப் படுத்து விட்டதால், அந்த குறிப்பு உதவவில்லை. வண்டியின் அடிப்பகுதி தரையைத் தொட்டிருந்தது.
(Pic courtesy - https://www.4wdingaustralia.com/)
இந்த மாதிரி மாட்டிக்கொண்டால், ஆஸ்திரேலியாவில் உதவிக்கு Roadside Assistance எனும் சாலை உதவி வாகனத்தை அழைக்கலாம் (கட்டணச் சேவைதான்!). ஆனாலும் எங்களால் முடியவில்லை; ஏனெனில், சட்டப்படி (எங்கள் வாடகை கம்பெனி விதிகள் அப்படி!) வாடகைக் கார்களை சாலையில்லா இடங்களில் (Off-Road), கடற்கரை மணலில் ஓட்டயிருக்கவே கூடாது.
இன்னொரு வாகனம் வந்து இழுத்தால்தான் வண்டி வெளியே வரும். கடற்கரை ஏற்கனவே வெறிச்சோடி காணப்பட்டது. நீண்ட வாரயிறுதியானதால், அழைப்பதற்குத் தெரிந்த நண்பர்களும் ஊரில் இல்லை. சூரியன் முழுவதும் மறைந்து, அந்தி நேர வெளிச்சமும், இருளும் சூழ ஆரம்பித்திருந்தன. நல்ல உக்கிரமான வெயில் அடித்திருந்தும், சூரியன் மறைந்துவிட்டதால், நல்ல குளிர்ந்த கடற்கரை காற்று வீச ஆரம்பித்திருந்தது. யாருக்குத் தெரியும், 'இப்படி நட்ட நடுபீச்சில் வந்து மாட்டிக்கொள்வோம்' என்று.
தொலைவில், உள்ளூர்வாசிகள் (Aussies) சிலர் தங்கள் சுற்றுலா கூடாரங்கள், மீன்பிடி உபகரணங்கள் (fishing gear) ஆகியவற்றைக் மூட்டை கட்டிக்கொண்டு, வீடு கிளம்பிக் கொண்டிருந்தனர். எங்கள் Ute வண்டியை வெளியே இழுக்க அவர்களின் உதவியைக் கோரினோம். அவர்களில் ஒருவர் தானாக முன்வந்தார்; வண்டி இழுக்கப் பொருத்தமான கொக்கி, கயிறுகள் மற்றும் சக்தி வாய்ந்த Four Wheel Drive (4WD) வண்டி வைத்திருந்தார். அவர் வந்து தனது 4WD உடன் எங்கள் Ute வண்டியைக் கட்டி இழுக்க ஆரம்பித்தார். அவரது 4WD இழுக்க முடியாமல் திணறி, தானும் பள்ளம் பறித்துப்படுத்துவிட்டது. இப்போது வானம் கிட்டத்தட்ட கருப்பு நிறமாக மாறியிருந்தது.
அதற்குள், எங்கள் உதவிக்கு வந்த நபரின் நண்பர்கள் வந்து, அவரை, எள்ளி நகையாடிவிட்டு (வழக்கமான ஆஸி நகைச்சுவை!), மாட்டிக்கொண்ட அவரது 4WD வண்டியை முதலில் இழுத்துக் காப்பாற்றினர். ‘இப்போது உனக்கு மறுவாய்ப்பு! உதவி கேட்டவர்களைக் காப்பாற்றி, நீயே உன் மானத்தை காப்பாற்றி கொள்கிறாயா...இல்லை..' என்று இழுத்தனர்.
இம்முறை, அவர் வெற்றிகரமாக, எங்கள் Ute வண்டியை மீட்டார். நாங்கள் மிக்க மகிழ்ச்சியாய் அவர்களுக்கு கைகுலுக்கி நன்றி தெரிவித்தோம். அவர்கள் தோள்களைக் குலுக்கி , ‘எந்த நேரத்திலும், உங்களுக்கு உதவுவது மகிழ்ச்சிதான் தோழர்களே!’ என்று சொல்லி விட்டு கிளம்பி போனார்கள். நாங்களும், வீட்டுக்கு வந்து சேர்ந்து, இரவு உணவு முடித்து, ஆஸ்திரேலியதின வாணவேடிக்கை (Fireworks) பார்த்து, அந்த நாளைக் கொண்டாடினோம்.
தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்டால், முன்பின் தெரியாதவராய் இருந்தாலும் ஓடோடி வந்து உதவி செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். தேவைப்பட்டால் தயக்கமின்றி உதவி கேளுங்கள்; உதவி கேட்பவர்களுக்கு நீங்களும் உதவி வழங்குங்கள்.
இதுதான் Mateship (நட்புணர்வு) எனப்படும் ஆஸ்திரேலிய பண்பாடு.
ஆஸ்திரேலிய தின வாழ்த்துகள்!
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #ஆஸிதமிழன்
Comments