முன்குறிப்பு: இதை என்னுடைய சொந்த கருத்து மட்டுமே. நான் சார்ந்திருக்கும் நிறுவனங்களின் கருத்து அல்ல.
‘உலகத் தேர்தல்களில் முதன்முறையாக, அமெரிக்க தேர்தலில் ஒரு தமிழர் போட்டி', 'இங்கிலாந்து தேர்தலில் வென்ற தமிழர்' என்று செய்திகள் பார்க்கும்போதெல்லாம் ‘பரவாயில்லையே, தமிழ் நாட்டிலேர்ந்து நம்ம ஆளு ஒருத்தர் போய், அந்த நாட்டுல போட்டி போடறாங்களேன்னு ஒரு நிமிடம் பெருமையா இருக்கும். ஆனா, பக்கத்திலே வெள்ளைக்கார போட்டோவைப் போட்டு 'இவருதான், அவரு'னு இருக்க படத்தை பார்த்தால் 'அடச்சை, இவரயா நினைச்சு பெருமைப்பட்டோம்' என்றாகிவிடும்.
இப்ப ட்ரெண்டிங்-கில் இருக்கும் அமெரிக்க சித்தி கமலா ஹாரிஸ் மிகச்சிறந்த உதாரணம். ம்ம்ம்ம்..இல்லாத ஊருக்கு, இலுப்பை பூ தான் சர்க்கரை.
அக்டோபர் மாதம் 31ம் தேதி நடக்க இருக்கும் குயின்ஸ்லாந்து மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழர் திரு. பழனிச்சாமி (@PalaniForMaiwar) அவர்கள் தமிழ் நாட்டில், மதுரைக்கு அருகிலுள்ள அருகிலுள்ள புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்து, பின் ஆஸ்திரேலியாவுக்கு புலம் பெயர்ந்தவர். தற்போது ஆட்சியில் இருக்கும் தொழிலாளர் (லேபர்) கட்சி சார்பில், மேவார் தொகுதியில் போட்டியிடுகிறார். இதுவரை, மெல்பன் (விக்டோரியா), ஸிட்னி (நியூ சவுத் வேல்ஸ்) பகுதிகளில் தமிழர்கள் தேர்தல் களத்தை சந்தித்துள்ளனர்; இம்முறை குயின்ஸ்லாந்தில்!
நடுகுறிப்பு: மேவார் தொகுதியின் கீழ் வரும் புறநகர் பகுதிகள்: மவுண்ட் கூட்-தா (Mount Coot-Tha), பார்டன் (Bardon), ஆக்கன்ப்ளவர் (Auchenflower), டூவாங் (Toowong), தரிங்கா (Taringa), இந்தூரூபில்லி (Indooroopilly), செயின்ட் லூஷியா (St Lucia) மற்றும் ஃபிக் ட்ரீ பாக்கெட் (Fig Tree Pocket).
தனிப்பட்ட முறையில் எனக்கு அவரை கொஞ்சம்தான் தெரியும்.
திரு. பழனிச்சாமிக்கு கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு அவரின் கடுமையான உழைப்புக்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பலன் என்பதில் சந்தேகமில்லை.
அதே வேளையில், இது பல்லின மக்களிடையே, குறிப்பாக இந்திய, தமிழ் மக்களிடயே உள்ள ஒற்றுமை/இணக்கத்துக்கு வைக்கப்பட்ட ஒரு சவால். இந்த வாய்ப்பை தந்ததின் மூலம், உள்ளூர் அரசியல்வாதிகள் நம்மை உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்று தெரிகிறது. லேபர் கட்சி, நாட்டின் இரண்டு பெரிய கட்சிகளில் ஒன்று (மற்றொன்று லிபரல் கட்சி).
திரு. பழனி அவர்கள் பெறப்போகும் வாக்குகள், வரும் காலத்தில் உள்ளூர் அரசியல் களத்தில் காலூன்ற நினைக்கும் குயின்ஸ்லாந்துவாழ் பல்லின/இந்திய/தமிழ் மக்கள் அனைவருக்குமான நம்பிக்கை விதைகள்.
திரு. பழனி அவர்கள், இந்த தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்று, பல்லின மக்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக சிறக்க வாழ்த்துகள்.
ஆஸ்திரேலிய குடியுரிமை வாங்கி இருந்தால், தவறாமல் உள்ளூர் அரசியலில் பங்கெடுங்கள்.
பின்குறிப்பு: தமிழர் என்பதற்காக மட்டும் வாக்களிக்க மாட்டீர்கள் என்று தெரியும்; நல்ல சட்டமன்ற உறுப்பினராக திரு. பழனி அவர்கள் வருவாரென்று நீங்கள் நினைத்தால் தங்கள் ஆதரவை அளியுங்கள்.
-திரு
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்
facebook.com/#ஆஸிதமிழன்
Comments